ஈரோட்டு கடப்பாரை துருப்பிடித்தது: ஈ.வெ.ரா.,வை தாக்கும் சீமான்
ஈரோட்டு கடப்பாரை துருப்பிடித்தது: ஈ.வெ.ரா.,வை தாக்கும் சீமான்
ADDED : டிச 21, 2025 02:46 AM

திருச்சி: 'ஈ.வெ.ரா.,வை திட்டி ஓட்டு கேட்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா?'' என சீமான் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது ஓட்டு திருத்தம் என்கின்றனர். ஒரு கோடி ஓட்டுகளை நீக்குவது எப்படி திருத்தமாகும்?
விடுபட்டவர்களை குறுகிய காலத்திற்குள் கண்டறிந்து, மீண்டும் எப்படி சேர்க்க முடியும்? வாக்காளராக பட்டியல் பதிவில் பெயரை காப்பாற்றுவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. இது, அதிகாரத்தின் பொறுப்பற்ற செயல்.
களத்தில் இல்லாதவர் குறித்து பேச வேண்டியதில்லை என்கிறார் விஜய். அவர் இன்னும் களத்துக்கே வரவில்லை. அவர் எப்படி களத்தில் இல்லாதவர்கள் என பேச முடியும்? மொத்தத்தில் நகைச்சுவையாக உள்ளது.
ஈரோடில் பேசிய விஜய், ஈரோட்டு கடப்பாரை என ஈ.வெ.ராமசாமி குறித்து பேசினார். அந்த கடப்பாரை துருப்பிடித்து விட்டது.
திட்டங்களின் பெயரை மாற்றுவது ஆட்சியாளர்களுக்கு வாடிக்கை தான். வெளிநாடு சென்றால் காந்தியும், அம்பேத்கரும் தான், அங்குள்ளோருக்கு தெரியும். பா.ஜ., கட்சியினர் எந்த திட்டத்துக்கும் காந்தி பெயரை வைக்கவில்லை.
விளம்பர அரசியல் செய்யும் தி.மு.க., அரசு பள்ளி கட்டடங்களை முறையாக கட்டாமல், பல்லாயிரம் கோடிக்கு புது திட்டங்களை அறிவிக்கிறது.
கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் தேவதைகளாக தெரிந்தனர். இன்று அவர்கள் தேவையற்றவர்களாக தெரிகின்றனர்.
நாடே போராட்டக் களத்தில் இருக்கும் போது நல்லாட்சி தருகிறோம் என பேசுகின்றனர். ஒவ்வொரு தேர்தலின் போதும், அனைத்து கட்சிகளும் துாய சக்திகளாகி விடுகின்றன.
கடந்த 2021 தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த விஜய், தற்போது தி.மு.க.,வை தீயசக்தி என்கிறார். மக்களும், கொள்கைகளுக்காக ஓட்டளிக்கவில்லை; நோட்டை நீட்டினால்தான் ஓட்டளிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒருவர் தற்கொலை செய்தது முழு தவறு. அறிவார்ந்த சமூகம் இப்படி செய்யக்கூடாது.
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் விளக்கேற்றுவது தொடர்பாக, இரு தரப்பையும் அழைத்து பேசி, பிரச்னையை தமிழக அரசு சுமுகமாக தீர்த்திருக்க வேண்டும். பாபர் மசூதி போல் சிக்கந்தர் தர்கா ஆகி விடும் என பேசுவது சரியல்ல; தேவையில்லாத கற்பனை.
விஜய்க்கு தி.மு.க., மட்டும் தான் எதிரி. ஆனால் எனக்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் என நான்கு எதிரிகள். ஈ.வெ.ரா.,வை திட்டி ஓட்டு கேட்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா? இடைத்தேர்தலில், அதை நான் செய்தேன்.
ஈ.வெ.ரா., பெயரை சொல்லி ஓட்டு கேட்டவர்கள், அவருடைய சொந்த ஊரான ஈரோடில் 250 ஓட்டுக்கள் தான் வாங்கினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

