எத்தியோப்பிய எரிமலை சாம்பல் புகையால் பாதிப்பு; இந்திய விமான சேவையில் இடையூறு
எத்தியோப்பிய எரிமலை சாம்பல் புகையால் பாதிப்பு; இந்திய விமான சேவையில் இடையூறு
UPDATED : நவ 26, 2025 11:13 AM
ADDED : நவ 26, 2025 05:47 AM

புதுடில்லி: எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை, வட மாநிலங்களின் வான்பரப்பை சூழ்ந்ததால், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் பகுதியில் உள்ள ஹைலி குப்பி எரிமலை, கடந்த 23ம் தேதி காலை வெடித்தது.
எச்சரிக்கை
12,000 ஆண்டுகளுக்குபின் முதன்முறையாக வெடித்து சிதறிய இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம், செங்கடல் வழியாக ஏமன், ஓமன், வடக்கு பாகிஸ்தானை தொடர்ந்து, இந்திய வான்பரப்பையும் நேற்றிரவு ஆக்கிரமித்தது. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இது கண்டறியப்பட்டதாக தனியார் வானிலை கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹைலி குப்பி எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம், நேற்று முன்தினம் காலை குஜராத் எல்லையை வந்தடைந்தது. இது, வட மாநில வான்பரப்பை நேற்று இரவு கடந்த நிலையில், கிழக்கு நோக்கி நகர்ந்து நம் அண்டை நாடான சீனாவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம், அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களுக்கு நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது.
இதைத்தொடர்ந்து, நம் நாட்டிற்கும், மேற்காசிய நாடுகளுக்கும் இடையே இயக்கப்படும் விமானங்கள் தாமதம் ஆனதுடன், மாற்றுப்பாதையில் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, நம் நாட்டில் உள்ள, 'ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், கே.எல்.எம்.,' போன்ற முன்னணி விமான நிறுவனங்கள், பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல விமான சேவைகளை நேற்று ரத்து செய்தன. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஹைலி குப்பி எரிமலையின் வெடிப்பு, சில மணி நேரங்களில் நின்றாலும் அதில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை மண்டலம் வட மாநிலங்களின் வான்பரப்பை நோக்கி நகர்ந்தது. இதையடுத்து, இந்திய விமான போக்குவரத்து ஆணையம், சாம்பல் புகை மண்டலத்தின் உயரத்தையும், பாதையையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஸ்தம்பித்த சேவை
'ஏர் இந்தியா' நிறுவனத்தின் ஏழு சர்வதேச விமானங்கள் உட்பட, 13 விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டன. இது தவிர பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சில விமானங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதேபோல், 'ஆகாசா ஏர்' நிறுவனமும் இரண்டு சர்வதேச விமான சேவைகளை நேற்று ரத்து செய்தது. குறிப்பாக மேற்காசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப் பட்டன.

