ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு டிரம்ப் தடை: அமெரிக்காவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி கண்டனம்
ADDED : டிச 24, 2025 09:48 PM

லண்டன்: ஆன்லைனில் வெறுப்பு மற்றும் பொய் தகவலுக்கு எதிராக போராடும் ஐரோப்பாவை சேர்ந்த 5 பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கு ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரான்சை சேர்ந்த முன்னாள் ஐரோப்பா கமிஷனர் தியெரி பிரெட்டன் உள்ளட்ட ஐரோப்பா குடிமகன்கள் ஐந்து பேருக்கு விசாவை ரத்து செய்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிப்பதற்கும், விதிமுறைகளை மீறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக தியெரி பிரெட்டன், குரல் கொடுத்து வந்தார். அவர் பதவியில் இருந்த போது இணைய பாதுகாப்பு குறித்து வகுத்த கொள்கை அடிப்படையில் எக்ஸ் நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது . இதற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
அவருக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இம்ரான் அஹமது, அன்னா லேனா வோன் ஹூண்டன்பெர்க், ஜோசப்பின் பலோன், கிளாரே மெல்போர்டு, ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேச்சு சுதந்திரம், பாதுகாப்பு, குடியேற்றம், வர்த்தகம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் மோதல் ஆகிய விஷயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அமெரிக்காவின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். ஐரோப்பாவில் பேச்சு சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அடிப்படை கொள்கை. பொருளாதார கொள்கையை வலுப்படுத்த ஐரோப்பா ஒன்றியத்துக்கு உரிமை உண்டு. தேவைப்பட்டால், நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக எங்கள் ஒழுங்குமுறைச் சுயாட்சியைக் காக்க, நாங்கள் விரைவாகவும் உறுதியாகவும் பதிலடி கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய டிஜிட்டல் இறையாண்மையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலுக்கு சமம் எனக் கூறியுள்ளார்.
ஜெர்மனி நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா தடை செய்த ஜெர்மன் நிர்வாகிகளுக்கு ஆதரவு அளிப்போம். அவர்களின் விசாவுக்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளது.

