மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் ஐரோப்பிய ஆணைய தலைவர்!
மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் ஐரோப்பிய ஆணைய தலைவர்!
ADDED : செப் 07, 2025 11:24 AM

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ள 27 நாடுகளை கொண்டது ஐரோப்பிய ஒன்றிய ஆணையம். இதன் தலைவராக உர்சுலா வான் டெர் லேயன் உள்ளார். ஜெர்மனியை சேர்ந்தவர். இவர், கடந்த 2019ல் ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார். இரண்டாம் முறையாக, 2024ம் ஆண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் மீது கடந்த கோடை காலத்திற்கு முன்னர் ஐரோப்பிய பார்லிமென்டில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து உர்சுலா வான் டெர் லேயன் தப்பினார். குறுகிய காலத்தில் மீண்டும் அவரது பதவிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.இத்தகவலை ஐரோப்பிய ஒன்றியத்தின் இடதுசாரி குழு செய்தி தொடர்பாளர் தாமஸ் ஷானன் கூறினார். அவர் கூறியதாவது:
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ள உர்சுலா வான் டெர் லேயன் மீது இடதுசாரிகள் மற்றும் ஐரேப்பாவுக்கான பிரதிநிதிகள் குழுக்கள், இரண்டு வெவ்வேறு கண்டனத் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கண்டன தீர்மானங்கள் பார்லிமென்டில் அடுத்த வாரங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
தீர்மானம் கொண்டு வருவதற்கு மொத்தம் உள்ள 720 பார்லிமென்ட் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைந்தபட்சம், 10ல் ஒரு பங்கு பேர், அதாவது 72 பேர் கையெழுத்திட வேண்டும். இந்த கையொப்பங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், அதன் தலைவர் உடனடியாக பார்லிமென்ட் விதிகளின் கீழ் பார்லி உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து தீர்மானம் குறித்த முழுமையான விவாதம் அறிவிப்பு வெளியாகும். இது 24 மணி நேரத்திற்குள் நடைபெற வேண்டும்.
இவ்வாறு தாமஸ் ஷானன் கூறினார்.தலைவர் மீதான கண்டனத் தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில், அவர் பதவி விலக நேரிடும். உக்ரைன் போர், அமெரிக்க உறவுகள் போன்ற முக்கிய விவகாரங்களில் உர்சுலா தீவிர பங்காற்றி வருகிறார். மேலும், ஐரோப்பிய பொருளாதாரத்தின் முக்கிய துாண்களில் ஒன்றாக ஜெர்மனி இருக்கிறது. எனவே, அவ்வளவு எளிதாக கண்டனத் தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.