ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; நூலிழையில் உயிர்தப்பிய பிரிட்டன் மாஜி பிரதமர்
ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; நூலிழையில் உயிர்தப்பிய பிரிட்டன் மாஜி பிரதமர்
ADDED : செப் 14, 2026 09:47 AM

கீவ்: உக்ரைன் - போலந்து எல்லை அருகே பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்ற ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அங்கிருந்த மற்றொரு ரயில் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய யூனியன் உயர்மட்டக் குழுவினர் ஒரு சிறப்பு ரயிலில் போலந்து நோக்கி சென்றனர்.
முன்கூட்டியே புறப்பட்ட ரயில்:
போலந்து எல்லையோர பகுதியான யாஹோதின் ரயில் நிலையத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றது. அது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதே ரயில் நிலையத்தில் நின்றிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது ரஷ்யாவின் ஆளில்லா டிரோன், வெடிகுண்டு வீசி தாக்கியது.
ரஷ்ய டிரோன் வருவதை முன்கூட்டியே கவனித்த ரயில்வே ஊழியர்கள், அந்த ரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது; யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இலக்கு யார்?
உக்ரைன் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முக்கிய தலைவர்கள் சென்ற ரயிலை குறிவைத்துதான் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், அந்த ரயில் முன்கூட்டியே புறப்பட்டு விட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
புடினுக்கு கண்டனம்:
இச்சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ள போரிஸ் ஜான்சன், 'எல்லைப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கான ரயில் மீது புடின் எதற்காக குண்டு வீசினார் என்ற விபரீத புத்தி புரியவில்லை. அப்பாவி உக்ரைன் மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற அறிவற்ற தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்' என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். நேட்டோ எல்லையான போலந்துக்கு மிக அருகில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
