என்.ஜி.ஓ., எண்ணிக்கை பாதியாக குறைவு: வெளிநாட்டு நிதி இரு மடங்கு அதிகரிப்பு
என்.ஜி.ஓ., எண்ணிக்கை பாதியாக குறைவு: வெளிநாட்டு நிதி இரு மடங்கு அதிகரிப்பு
ADDED : செப் 18, 2026 10:26 PM

புதுடில்லி : எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா அமைப்புகளின் எண்ணிக்கை, 10 ஆண்டுகளில், பாதியாக குறைந்துள்ளது. அதே சமயம், வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட நிதி, இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிடம் இருந்து நிதியை பெறும் அரசு சாரா அமைப்புகளை மேலும் கண்காணிக்கும் வகையில், எப்.சி.ஆர்.ஏ., சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு, பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ., லோக்சபா எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையிலான கூட்டுக்குழுவில், 31 எம்.பி.,க்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், எப்.சி.ஆர்.ஏ., திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம், அதன் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையிலான அதிகாரிகள், வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் குறித்த விபரங்களை தெரிவித்தனர்.
மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் கூறியதாவது: நாட்டில் தற்போது, 14,466 எப்.சி.ஆர்.ஏ., பதிவு செய்த அரசு சாரா அமைப்புகள் உள்ளன. 2015ல் இந்த எண்ணிக்கை, 29,022 ஆக இருந்தது. அதே சமயம், அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதி, 2015- - 16ல், 17,832 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024- - 25ல், 22,974 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 2,102 அமைப்புகள் உள்ளன.
2024- - 25ல், வெளிநாடுகளில் இருந்து எப்.சி.ஆர்.ஏ., பதிவு செய்த அமைப்புகள் பெற்ற நிதி, 22,974 கோடி ரூபாய். இதில் அமெரிக்கா அதிகபட்சமாக, 12,113 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. மத அமைப்புகள், 5,150 கோடி ரூபாய் பெற்றுள்ளன. இதில் கிறிஸ்தவ அமைப்புகள், 1,345 கோடி ரூபாய்; ஹிந்து அமைப்புகள், 328 கோடி ரூபாய்; முஸ்லிம் அமைப்புகள், 19 கோடி ரூபாய் பெற்றுள்ளன. இதுவரை, 21,983 அரசு சாரா அமைப்புகளின் எப்.சி.ஆர்.ஏ., பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
