'வந்தே மாதரம்' பாட திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு
'வந்தே மாதரம்' பாட திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு
ADDED : ஆக 15, 2026 12:55 AM

கோஹிமா: 'வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயமாக்கும் எந்த உத்தரவும் கடும் எதிர்ப்புக்குரியது' என, நாகாலாந்து கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
தேசிய பாடலான, 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, 'அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன், 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.
இந்த பாடலை அவமதிப்பவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவும் பார்லி.,யில் நிறைவேறியது.
இந்நிலையில், வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உத்த ரவுக்கு, வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ள கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேசபக்தி
இது குறித்து, நாகாலாந்து பாப்டிஸ்ட் திருச்சபை கவுன்சிலின் பொதுச் செயலர் ரெவ் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டின் தேசிய சின்னங்கள், தேசபக்தி உணர்வுகள், அரசியலமைப்பு சட்டங்களை நாகாலாந்து திருச்சபைகள் கூட்டமைப்பு முழுமையாக மதிக்கிறது. அதேசமயம், தேசபக்தி உணர்வை கட்டாயப்படுத்தி வரவழைப்பதை ஏற்க முடியாது.
தனித்துவம்
நம் நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பு என்பது சுதந்திரம், சமத்துவம், பன்முகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. தேச ஒற்றுமையை ஒரேமாதிரி தன்மையுடன் ஒப்பிடக்கூடாது. தேசபக்தியை வெளிப்படுத்துவதை வைத்து, ஒரு குடிமகனின் தேசத்தின் மீதான அன்பை அளவிட முடியாது.
இந்தியாவின் பல்வேறு நம்பிக்கைகள், கலாசாரங்கள், மொழிகள், மரபுகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவை நாட்டின் தனித்துவமான அடையாளங்கள். தேசிய சின்னங்கள் அல்லது நடைமுறைகள், வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறு அர்த்தத்தை கற்பிக்கின்றது.
அரசு மற்றும் பொது நிறுவனங்கள் நிதானத்துடனும், உணர்வுபூர்வமாகவும் செயல்பட வேண்டும். எனவே, வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
