வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்: எத்தியோப்பியா பார்லியில் பிரதமர் மோடி பேச்சு
வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்: எத்தியோப்பியா பார்லியில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : டிச 17, 2025 01:08 PM

அடிஸ் அபாபா: ''எத்தியோப்பியாவும், எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாக இருப்பதால், வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
எத்தியோப்பியா பார்லிமென்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய மக்களின் சார்பாக, உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாகும். இந்தியாவின் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் இரண்டும் நமது நிலத்தை தாய் என்று குறிப்பிடுகின்றன.
நட்பு, சகோரத்துவம்
அவை பாரம்பரியம், கலாசாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ள நம்மைத் தூண்டுகின்றன. மேலும் தாயகத்தை பாதுகாக்கின்றன. இந்திய நிறுவனங்கள் இன்று எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 140 கோடி இந்திய மக்களின் சார்பாக, நட்பு மற்றும் சகோதரத்துவத்தின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெற்றதில் நான் பெருமை அடைந்தேன்.
பணிவுடன்…!
இந்திய மக்களின் சார்பாக இந்த விருதை கூப்பிய கரங்களுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவிற்கு, எத்தியோப்பியாவிற்கு இடையே வலுவான உறவுகள் உள்ளது. இந்த மாபெரும் கட்டடத்தில் உங்கள் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இங்கே மக்களின் விருப்பம் அரசின் விருப்பமாக மாறுகிறது. அரசின் விருப்பம் மக்களின் விருப்பத்துடன் இணக்கமாக இருக்கும் போது, திட்டங்களின் பலன் எளிதில் சென்று அடைகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

