மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரூ.100 கோடி நிதி முறைகேடு? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ருவுக்கு இறுகும் பிடி
மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரூ.100 கோடி நிதி முறைகேடு? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ருவுக்கு இறுகும் பிடி
UPDATED : டிச 21, 2025 01:26 AM
ADDED : டிச 21, 2025 01:00 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தில், கால்பந்து ஜாம்பவான் லியோனெல் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் குளறுபடி நடந்த விவகாரத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைதான நிலையில், அவரது வீட்டில் நடத்திய சோதனையில், நிதி முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருக்கலாம் என கூறப்படுவதால், வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின், தேசிய கால்பந்து அணி கேப்ட னும், ஜாம்பவானுமான மெஸ்ஸிக்கு உலகம் முழு தும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நம் நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
சமீபத்தில் நம் நாட்டுக்கு வந்த மெஸ்ஸி, மேற்கு வங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் டில்லிக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். அவருடன், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் போட்டி போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
போர்க்களம்
மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில், மெஸ்ஸியின் முதல் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 13ல் நடந்தது. இதை சதத்ரு தத்தா என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நுழைவுக்கட்டணமாக, 10,000 - 15,000 ரூபாய் வரை ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டது.
சால்ட் லேக் மைதானத்துக்கு வந்த மெஸ்ஸியை, அரசியல்வாதிகளும், பிரபலங்களும் சூழ்ந்ததால், ரசிகர்களால் அவரை பார்க்க முடியவில்லை. 10 நிமிடங்களிலேயே மைதா னத்தை விட்டு அவர் வெளியேறினார்.
மெஸ்ஸியை பார்க்க முடியாததால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். அந்த இடமே போர்க்களமானது. பல மணி நேரம் போராடி போலீசார் நிலைமையை கட்டுப்படுத்தினர்.
தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, மன்னிப்பு கேட்டதுடன், குளறுபடி குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தார்.
வழக்குப் பதிந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை அன்றைய தினமே கைது செய்தனர். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் ரிஷ்ரா என்ற பகுதியில் உள்ள சதத்ரு தத்தா வீட்டில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, கூட்ட நெரிசல் மேலாண்மையை தாண்டி, பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கூறியதாவது:
ரசிகர்கள் அமர்ந்திருந்த பகுதியை தாண்டி, சால்ட் லேக் மைதானத்திற்குள் செல்ல, 150 நுழைவுச்சீட்டு களை மட்டுமே வழங்கியதாகவும், ஆனால், சில செல்வாக்குமிக்க நபர்களின் அழுத்தத்தால், அதை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் சதத்ரு தத்தா வாக்குமூலம் அளித்துள்ளார்.
மெஸ்ஸியை யாரும் தொடக்கூடாது என, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாகவும், ஆனால், அது மீறப்பட்டதாகவும் அவர் கூறினார். விசாரணையின் ஒரு பகுதியாக, சதத்ரு தத்தாவின் வங்கிக் கணக்குகளில் இருந்த, 22 கோடி ரூபாயை முடக்கி உள்ளோம்.
மூன்று தளங்கள் உடைய அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது, ஒரு தளத்தில் நீச்சல் குளம், மொட்டை மாடியில் சிறிய கால்பந்து மைதானம், பிரமாண்ட அலுவலகம் போன்ற வசதிகள் இருப்பதை கண்டறிந்துள்ளோம்.
மோசடி
மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ஒரு நபருக்கு, 10 லட்சம் - 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இதற்கான ஆவணங்கள் இல்லை. இந்த பணம் ரொக்கமாக பெறப் பட்டு, கணக்கில் காட்டப் படாத வருமானமாக மாற்றப்பட்டிருக்கலாம்.
மொத்த டிக்கெட் விற்பனையில் பாதி டிக்கெட்டுகளுக்கான ஆவணங்களை காணவில்லை. 66,000 பேர் அமரக்கூடிய சால்ட் லேக் மைதானத்தில், பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டதாகவும், மீதமுள்ளவை இலவசமாக வழங்கப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இவ்வளவு பெரிய வணிக ரீதியான நிகழ்ச்சியில், பாதி டிக்கெட்டுகளை இலவசமாக கொடுத்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுவதை நம்ப முடியவில்லை.
இதில் பெரும் நிதி மோசடி நடந்திருக்கலாம். 100 கோடி ரூபாய் வரை நிதி முறைகேடுகள் நடந்திருக்கலாம். இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

