அதிகாலை நேர பயணத்தால் நேர்ந்த சோகம்; குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி
அதிகாலை நேர பயணத்தால் நேர்ந்த சோகம்; குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி
ADDED : செப் 27, 2025 09:55 AM

புதுடில்லி: டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆண் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு, ஆறு பேர் காரில் ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்த போது அதிகாலை 4.30 மணிக்கு இந்த விபத்து நிகழந்துள்ளது. ''தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை'' என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கார் டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.