பெருவெள்ளத்தில் சிக்கி 626 பேர் பலி; 2400 பேர் மாயம்: நேபாளம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பெருவெள்ளத்தில் சிக்கி 626 பேர் பலி; 2400 பேர் மாயம்: நேபாளம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
UPDATED : ஆக 29, 2026 08:02 PM
ADDED : ஆக 29, 2026 06:57 PM

காத்மாண்டு: பெருவெள்ளத்தில் சிக்கி 626 பேர் பலியாகி உள்ளனர், 2,400 பேர் காணவில்லை என்று நேபாளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் அளித்த பேட்டி;
2026ம் ஆண்டு ஆக.26ம் தேதி போடேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவுக்கான காரணம் இன்னமும் முழுமையாக கண்டறியப்படவில்லை. தேடுதல் நடவடிக்கை, மீட்பு, சீரமைப்புகள் என எங்களிடம் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி முழு வீச்சாக பணிகளில் இறங்கி உள்ளோம். அனைத்து பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்ட்டு வருகின்றன.
நேபாள மக்கள் மட்டுமல்லாது காணாமல் போன வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களையும் கண்டுபிடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போதைக்கு இதுவே எங்களின் முக்கிய பணி.
இதுவரை 626 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 2,400 பேர் குறித்து எந்த தகவல்களும் தெரியவில்லை. 187க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 4450க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். தேடுதல் பணிகள், சரிபார்ப்பு பணிகள் நீடிப்பதால் பலி எண்ணிக்கை, காணாமல் போனவர்கள், சேத மதிப்புகள் குறித்த புள்ளி விவரங்களில் மாற்றம் காணப்படலாம்.
எனவே, அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள். உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுவதையோ அல்லது ஒளிபரப்புவதையோ நேபாள மக்கள் தவிர்க்க வேண்டும். ஊடகங்களும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுவதையும், ஒளிபரப்புவதையும் தவிர்க்க வேண்டும். பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் ரசுவா, நுவாகோட், தாடிங், சித்வான் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர், மீட்புக்குழுவினர் அரசுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். அனைத்து முயற்சிகளையும் நேபாள அரசு மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கனால் கூறினார்.
இதனிடையே, பெருவெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை நேபாள சுற்றுலா வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
இன்றைய (ஆக.29) தினம் மாலை 5.30 மணி அளவில் பதிவான தகவல்களின்படி, மொத்தம் 753 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் ஆண்கள் 385 பேர், பெண்கள் 337 பேர் ஆவர். காணாமல் போனவர்களில் அதிகம் பேர் இந்தியர்களே. 183 பேர் மாயமாகி இருக்கின்றனர். நேபாள மக்கள் 164 பேரும் (ஆண்கள்-247, பெண்கள் - 311) காணாமல் போயுள்ளனர்.
மீட்புப் பணிகளின் போது 187 ஆண்கள், 41 பெண்கள் என 228 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 4 பேர் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.
