தெலுங்கானா, பீஹாரை பின்பற்றுங்கள்: பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்
தெலுங்கானா, பீஹாரை பின்பற்றுங்கள்: பிரதமருக்கு கார்கே, ராகுல் கடிதம்
ADDED : ஆக 26, 2026 12:33 AM

- சிறப்பு நிருபர் -
ஜாதிவாரி கணக்கெடுப்பில் தற்போதைய வினாத்தாள் அடங்கிய படிவத்தை ரத்து செய்ய வேண்டும். பீஹார், தெலுங்கானா அரசுகள் பின்பற்றிய நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர்.
நாடு முழுதும் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. இதன்பின், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதற்கான வினாக்களை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. அந்த படிவத்தில், ஜாதிகள் தொடர்பான பட்டியலுக்கு பதிலாக, 'நீங்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்' என்ற பொதுவான கேள்வி இடம் பெற்று இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு, காங்., தேசிய தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர், நேற்று கூட்டாக எழுதிய கடிதம்:
துல்லியமான தரவுகள் இல்லாமல், நாட்டில் சமூக நீதித் திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டால் மட்டுமே பல்வேறு ஜாதிகளின் எண்ணிக்கை மற்றும் சமூக - பொருளாதார நிலை குறித்த மதிப் பீட்டை மேற்கொள்ள முடியும்.
கணக்கெடுப்பில் ஜாதி விபரங்களை பதிவு செய்ய, 'திறந்தவெளி கேள்வி' முறையை மத்திய அரசு தேர்ந்தெடுத்து இருப்பது, தவறான புரிதலை ஏற்படுத்தும்.
நாட்டில் ஒரே ஜாதி, பல பிராந்தியங்களில் வெவ்வேறு பெயர்கள், துணை ஜாதிகள் மற்றும் மொழிவாரியான மாறுபாடுகளுடன் அழைக்கப்படுவதால், ஒரே ஜாதியானது ஆயிரக்கணக்கான தனித்தனி பெயர்களாக பிரிந்துவிடும் அபாயம் உள்ளது.
இது, லட்சக்கணக்கான ஜாதி பெயர்களை கொண்ட பட்டியலை உருவாக்கி, ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் ஒட்டுமொத்த தரவுகளையும் பயனற்றதாக மாற்றிவிடும். இதற்கு தீர்வாக, அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு பயன்படுத்தப்படுவதை போல, முன்னரே தயாரிக்கப்பட்ட ஜாதி பட்டியலை கொண்டு, 'டிராப் டவுன்' பட்டியலை உருவாக்க வேண்டும்.
இதே முறையைத் தான், பீஹார், தெலுங்கானா அரசுகள் பயன்படுத்தி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தின. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பில் தற்போதுள்ள வினாத்தாள் படிவத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள், நிபுணர்கள் மற்றும் மக்களுடன் கலந்தாலோசித்த பின், புதிய வினாத்தாள் படிவத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
