மாஜி ராணுவ அதிகாரியிடம் ரூ.56 லட்சம் 'ஆன்லைன்' மோசடி
மாஜி ராணுவ அதிகாரியிடம் ரூ.56 லட்சம் 'ஆன்லைன்' மோசடி
ADDED : நவ 22, 2025 12:33 AM

பெங்களூரு: மும்பை போலீஸ் அதிகாரி போல் நடித்து, பெங்களூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 56.05 லட்சம் ரூபாய், 'ஆன்லைன்' மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மத்திய பெங்களூரை சேர்ந்த, 83 வயதான ஓய்வு பெற்ற ராணுவ கர்னலுக்கு, அக்., 27ல், 'மொபைல் போன்' அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர், மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் என தன்னை அறிமுகம் செய்துள்ளார்.
அப்போது ராணுவ அதிகாரியி ன், 'சிம் கார்டை' பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளதுடன், சட்டவிரோத விளம்பரங்கள் செய்துள்ளதால் விசாரணைக்கு மும்பை வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
வீடியோ அழைப்பில் உயர் அதிகாரி கவிதா பூமானே விசாரணை நடத்துவார் என கூறி மற்றொரு பெண்ணை வீடியோ அழைப்பில் இணைத்துள்ளார். தொடர்ந்து மற்றொரு உயர் அதிகாரி என கூறி விஷ்வாஸ் என்பவரும் கர்னலிடம் மோசடி குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, கர்னலை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறி, நேரடியாக கைது செய்யாமல் இருக்கவும் ரிசர்வ் வங்கியின் சரிபார்ப்புக்காகவும் வங்கி விபரங்களை தரும்படி கேட்டுள்ளனர்.
அவர்களது அறிவுறுத்தலின்படி, 6 லட்சம், 5 லட்சம், 35.05 லட்சம், 10 லட்சம் ரூபாய் என மொத்தம், 56 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு அவர் அனுப்பியுள்ளார்.
ரிசர்வ் வங்கி சரிபார்த்த பின் அந்த பணம் மூன்று நாட்களில் திருப்பி ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர். மூன்று நாட்கள் ஆன நிலையில் பணம் திரும்பி வராததால் கடந்த, 18ம் தேதி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் கர்னல் புகார் அளித்தார். மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

