UPDATED : டிச 30, 2025 10:46 AM
ADDED : டிச 30, 2025 07:37 AM

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அங்கு அவருக்கு சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் இன்று (டிசம்பர் 30) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். கடந்த 1991 - 96 மற்றும் 2001 - 06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்த கலிதா ஜியா, ஊழல் வழக்குகளில் சிக்கி, 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.
யார் இந்த கலிதா ஜியா
* 1945ம் ஆண்டில் பிறந்த கலிதா ஜியா, 1960ல் அப்போதைய ராணுவ அதிகாரியான
ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்து கொண்டார்.
* வங்கதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ரஹ்மான், பிற்காலத்தில் முஜிபூர் ரஹ்மான் கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிவில் அதிபராக பொறுப்பேற்றார்.
* ஜியாவுர் ரஹ்மானின் மனைவி கலிதா ஜியா, 1981ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலுக்கு வந்தார். 1984ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து இருக்கிறார்.
* இவரது கட்சி பிஎன்பி கடந்த மூன்று தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டது. இருந்தாலும் கலிதா ஜியா முக்கியமான அரசியல் கட்சி தலைவராக திகழ்ந்து வந்தார்.
* 17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த கலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

