ADDED : டிச 11, 2025 10:03 PM

இஸ்லாமாபாத்: ஊழல் குற்றச்சாட்டு, ராணுவ சட்டத்தை மீறிய வழக்கில் சிக்கிய பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) பைஸ் ஹமீத்திற்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ராணுவ நீதிமன்றம்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) பைஸ் ஹமீத், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில் ஐஎஸ்ஐ தலைவராக இருந்தபோது மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தவர்.ஆட்சி மாறி நவாஸ் ஷெரீப் கட்சியினர் பதவிக்கு வந்த நிலையில், ஹமீத் செல்வாக்கு முடிவுக்கு வந்தது.
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் ராணுவச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக ஆகஸ்ட் 2024-ல் ராணுவம் அவரை கைது செய்து காவலில் எடுத்தது.
டாப் சிட்டி வீட்டுத் திட்ட ஊழல் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை 13 மாதங்களாக நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற விசாரணை முடிவில் ராணுவ நீதிமன்றம், பைஸ் ஹமீத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

