தாமதமின்றி சிலிண்டர் வினியோகம்: காஸ் ஏஜென்சிகளுக்கு எச்சரிக்கை
தாமதமின்றி சிலிண்டர் வினியோகம்: காஸ் ஏஜென்சிகளுக்கு எச்சரிக்கை
ADDED : மே 10, 2026 04:35 AM

சென்னை: 'வீட்டு வாடிக்கையாளர் களுக்கு, தாமதமின்றி சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்ய வேண்டும்; விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, காஸ் ஏஜென்சிகளை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தமிழகம் உட்பட நாடு முழுதும், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வினியோகம் செய்கின்றன.
அவற்றில், விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, காஸ் ஏஜென்சிகளை, எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக, நம் நாட்டில் கடந்த மார்ச்சில் பாதிக்கப்பட்ட, சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
எனவே, வீடுகளுக்கு, 100 சதவீதம் தடையின்றியும், வணிகப் பிரிவில், 70 சதவீதமும் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
எனவே, சிலிண்டர் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு தாமதமின்றி வினியோகம் செய்ய, காஸ் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க, தீவிர காண்காணிப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இரண்டு உட்பட நாடு முழுதும் விதிமீறலில் ஈடுபட்ட, 76 ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடை தடுக்க, வீடுகளில் வினியோகம் செய்யும் போது, 95 சதவீதம் ரகசிய குறியீடு முறை வாயிலாக, உறுதி செய்யப்படுகிறது. இது, விரைவில், 100 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார் .
