பாகிஸ்தானுக்கு திரும்பி செல்லுங்கள்; முகமது யூனுசுக்கு எதிராக போராட்டம்
பாகிஸ்தானுக்கு திரும்பி செல்லுங்கள்; முகமது யூனுசுக்கு எதிராக போராட்டம்
ADDED : செப் 28, 2025 08:17 AM

நியூயார்க்: வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே வங்கதேச புலம்பெயர்ந்தோர் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொது சபைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்த சூழலில், ஐ.நா., சபை தலைமையகத்திற்கு வெளியே வங்கதேச புலம்பெயர்ந்தோர் நேற்று ஒன்றுகூடி, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். முகமது யூனுஸ் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் அந்நாட்டுக்கே திரும்பிச் செல்லுமாறும் அவர்கள் கூச்சலிட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தை தலிபான் நாடாக, பயங்கரவாத நாடாக முகமது யூனுஸ் மாற்றி வருகிறார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்கதேசத்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டவிரோதமாக வெளியேற்றப் பட்டது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நிலைமை மோசமடைந்து வருகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து, பலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து மதங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முகமது யூனுஸ் அதிகாரத்தை விட்டுவிட்டு செல்ல வேண்டும். வங்க தேசத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.