நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்கணும்; மத்திய அரசு அறிவுரை
நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்கணும்; மத்திய அரசு அறிவுரை
UPDATED : செப் 09, 2025 12:57 PM
ADDED : செப் 09, 2025 10:53 AM

புதுடில்லி: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்பட்ட நிலையிலும், போராட்டம் தொடர்கிறது. நேற்று ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்ததை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக இந்தக்கால இளைஞர்கள் கருதும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 பேர் பலியான நிலையில், தடையை வாபஸ் பெறுவதாக நேபாள அரசு அறிவித்தது.நேபாள அரசின் இந்த குளறுபடியை அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
நேபாளத்தில் நடந்து வரும் சம்பவங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இளைஞர்கள் பலர் உயிர் இழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தொடர்புடைய அனைவரும் நிதானத்துடன் செயல்பட்டு, பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடரும் போராட்டம்
இன்று நேபாளத்தின் முக்கிய நகரங்களில் போராட்டம் தொடர்கிறது. தலைநகர் காத்மாண்டுவில், அதிபர் மாளிகை அருகே போராட்டக்காரர்கள் கும்பலாக கூடி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர், அதிபர் மாளிகை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.