ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்
ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்
ADDED : செப் 20, 2026 06:27 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே முடுக்குத்தரவை ரோட்டில் ரோந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 5 பேரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
முடுக்குத்தரவை ரோட்டில் போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு போலீசார் 4 நாட்களுக்கு முன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிசை மாற்று வாரியம் அருகே நின்றிருந்த 5 பேர், போலீசார் வருவதை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். போலீசார் அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர்.
அதில் ரூ.5 கோடி மதிப்பிலான 38 தங்க கட்டிகள், 28 பவுன் தங்க நகை, ரூ.12.20 லட்சம் ரொக்கம் இருந்தது. விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த குப்புசாமி 45, பரமக்குடி லீலாவதி நகர் செல்வராஜ் 62, துாத்துக்குடி மாவட்டம் ஆத்துார் சரவணன் 50, மாரிமுத்து 27, வேலாயுதம் 40, என தெரிந்தது.
முதலில் 5 பேரும் தங்களுக்கு எதுவும் தெரியாது எனக்கூறினர். பின்னர் எம்.ஜி.ஆர்., நகர் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தங்கம், ரொக்கம் கிடைத்ததாகவும், அதை பங்கிடுவதற்காக ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.போலீசார் 5 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களுக்கு தங்க கட்டிகள் கடத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. தற்போது கிலோ கணக்கில் சிக்கிய தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா; அல்லது கொள்ளையடித்த தங்க நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றினரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. முழு விசாரணைக்கு பின் தங்கம் எவ்வாறு இவர்களுக்கு கிடைத்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதலான தங்கம், ரொக்கம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
