ஆபரணத் தங்கம் இன்றே ஒரே நாளில் இருமுறை எகிறியது; சவரன் ரூ.1680 அதிகரித்து விற்பனை
ஆபரணத் தங்கம் இன்றே ஒரே நாளில் இருமுறை எகிறியது; சவரன் ரூ.1680 அதிகரித்து விற்பனை
UPDATED : டிச 27, 2025 06:09 PM
ADDED : டிச 27, 2025 10:05 AM

சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 27) ஆபரணத் தங்கம் காலையில் சவரனுக்கு ரூ.880ம், மாலையில் ரூ.800ம் உயர்ந்தது. இன்று ஒரேநாளில் மட்டும் ஆபரணத் தங்கம் ரூ.1680 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 25) ஆபரண தங்கம் கிராம் 12 ஆயிரத்து 820 ரூபாய்க்கும், சவரன்,ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிசம்பர் 26) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 12 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனையானது, . கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
காலையில் அதிகரித்தது போலவே, மாலையிலும் ஆபரணத் தங்கம் விலை ஏற்றம் கண்டது. கிராமுக்கு ரூ.100 என்ற வீதத்தில் சவரன் ரூ.800 உயர்ந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ. 13,100 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,04,800 ஆகவும் உள்ளது. காலை மற்றும் மாலை என இருமுறை இன்று ஒரேநாளில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1680 ரூபாய் அதிகரித்துள்ளது.

