அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
அரசு பஸ்களில் கால் நீட்ட முடியவில்லையே; 2 + 2 சீட் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 17, 2026 06:24 AM

மதுரை: நீண்ட துாரம் செல்லும் அரசு பஸ்களில் இருக்கைகள் குறுகலாக இருப்பதுடன், கால்களை நீட்டிப் பயணம் செய்ய போதிய இடவசதி இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கு தீர்வாக அதிக எண்ணிக்கையில் '2+2' இருக்கை அமைப்பு பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1100க்கும் மேற்பட்ட பஸ்கள் நீண்ட துாரத்துக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் குறைவான எண்ணிக்கையிலான அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் மட்டுமே உள்ளன. இதில் மட்டுமே '2+2' சாய்வு இருக்கை வசதி உள்ளது.
பிற அரசு பஸ்களில் இருக்கைகள் குறுகலாக இருப்பதுடன், கால்களை நீட்டிப் பயணம் செய்ய போதிய இடவசதி இல்லை. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், உயரமானவர்கள் உள்ளிட்டோர் கால்களை வசதியாக வைத்துக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் அகலமான '2+2' சாய்வு இருக்கைகளுடன் புதிய பஸ்களை வடிவமைக்க வேண்டும் என்ற பயணிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
தற்போது புதிதாக இயக்கப்படும் பிஎஸ்6 ரக பஸ்களில் நீண்ட துாரப் பயணத்துக்கு ஏற்ற இருக்கை வசதிகளை ஏற்படுத்தினால் பயணியரின் சிரமத்தைக் குறைக்க முடியும். 4 மணி நேரத்துக்கு மேல் பயணிக்கும் பஸ்களில் இருபுறமும் '2+2' அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும். இதனால் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்தாலும், வருவாயில் ஏற்படக்கூடிய மாற்றத்தை கணக்கிட்டு டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யலாம்.
பஸ்களின் உட்புற வடிவமைப்பை மாற்றும்போது இருக்கைகளின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட எடை, அவசரகால வெளியேறும் வசதி, பயணியர் செல்லும் பாதை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். நவீன பஸ்களை இயக்குவதுடன், பயணியரின் வசதிக்கும் முக்கியத்துவம் அளிக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
