தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் அரசு ‛ஈகோ' பார்க்க கூடாது ராம ரவிக்குமார் பேட்டி
தீபத்துாணில் தீபம் ஏற்றுவதில் அரசு ‛ஈகோ' பார்க்க கூடாது ராம ரவிக்குமார் பேட்டி
ADDED : நவ 13, 2026 07:01 PM

மதுரை:
திருப்பரங்குன்றத்தில் ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:
தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து அன்றைய தி.மு.க., அரசு செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு, தீர்ப்பை உறுதி செய்தனர். இந்த நிமிடம் வரை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எந்த தடையும் இல்லை. இது தொடர்பாக நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முக்கியமான வழக்கு நவ., 17ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் வெற்றி பெற வேண்டும்.
இந்த ஆண்டு தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பக்தர்களுடன் சேர்ந்து விளக்குகள் ஏற்றி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியிடம் வேண்டியுள்ளோம்.
கடந்த ஆண்டு தி.மு.க., அரசு வீண் பிடிவாதத்தால் ஒரு அகல் விளக்கை ஏற்றுவதற்கு தடை விதித்ததால், இன்று ‛அகல் விளக்கு' பிரச்னையால் மாட்டிக் கொண்டுள்ளது. தி.மு.க., ஆட்சியே போய் விட்டது. த.வெ.க., அரசு தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டனர். உச்சநீதிமன்றம் தடை கொடுக்க மறுத்து விட்டது.
த.வெ.க., அரசு வீண் பிடிவாதம் பிடிக்காமல், ஈகோ பார்க்காமல் நீதிமன்ற உத்தரவை மதித்து மகா தீபம் ஏற்ற வேண்டும். இந்த அரசு பல திட்டங்களுக்கு வெற்றி என பெயர் சூட்டுகின்றனர். அதேபோல் தீப தூணிலும் வெற்றி தீபம் ஏற்ற வேண்டும் என்றார்.
