தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குழு சூழ் அரசு!

 குழு சூழ் அரசு!

 குழு சூழ் அரசு!

2


UPDATED : ஏப் 12, 2026 02:39 AM

ADDED : ஏப் 12, 2026 02:37 AM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : ஏப் 12, 2026 02:39 AM ADDED : ஏப் 12, 2026 02:37 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதற்கெடுத்தாலும் விசாரணை கமிஷன் என்பது கடந்த கால அரசியல். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பதவியேற்றபோது, 'கமிஷன்களுக்கு' பதிலாக 'குழுக்கள்' அமைக்கும் புதிய டிரெண்டை உருவாக்கியது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பொருளாதாரம், கல்வி, சமூக நீதி என கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆழிசூழ் உலகு போல், இது ஒரு குழு சூழ் அரசு!

உண்மையில், இந்த குழுக்களால் என்ன பலன் கிடைத்தது?

 ரகுராம் ராஜன், எஸ்தர் டுப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரெஸ், எஸ்.நாராயண் போன்ற உலகளாவிய நிபுணர்களைக் கொண்ட 'பொருளாதார ஆலோசனைக் குழு' அமைக்கப்பட்ட போது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், இக்குழுவின் ஆலோசனைகளால் தமிழகத்தின் பொருளாதாரத்தில் என்ன பெரிய மாயாஜாலம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்விக்கு அரசிடம் தெளிவான பதில் இல்லை

 புதிய மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அக்குழுவில் இருந்து பேராசிரியர் ஜவஹர் நேசன் அதிருப்தியோடு விலகியது மாபெரும் சர்ச்சையானது.

அக்குழு அளித்த பரிந்துரை களும் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. அதே போல், தொழில் துறை தேவைக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது.

பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டிய கல்வி துறையின் நேரடி அதிகாரத்தை, இத்தகைய குழுக்களே தாமதப்படுத்துகின்றனவா என்ற விமர்சனமும் எழுந்தது

 சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அரசு துறைகளில் சமூக நீதி முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது இதன் பணி.

ஆனால், இதற்கென சமூக நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை செயல்படும் போது, தனியாக ஒரு குழு ஏன் என்ற கேள்வி உள்ளது.

அதேபோல, ஆன்லைன் ரம்மி தடைக்கும், பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை களையவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களின் சில பரிந்துரைகள், கயிறு கட்ட தடை போன்றவை வரவேற்பை விட அரசியல் சர்ச்சைகளையே கிளப்பின

 கொரோனா பேரிடர் காலத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையிலான குழு சிறப்பாகச் செயல்பட்டதை மறுக்க முடியாது.

ஆனால், நலிவடைந்த சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்க சுந்தரதேவன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் நிலை என்ன? அக்குழு பரிந்துரைத்த மின்கட்டண சலுகை, குறைந்த வட்டி கடன் போன்றவை முழுமையாக நிறைவேற்றப்படாததால், இன்றுவரை சிறு தொழில்கள் வீழ்ச்சியில் தான் உள்ளன.

நிதி துறையும், தொழில் துறையும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயங்களுக்கு எதற்கு குழு?

உருப்படியாக ஏதேனும் செய்ததாக சொல்ல வேண்டுமானால், அதிகபட்சம் பசுமை குழுவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் தொடர்பான விஷயங்களை சொல்லலாம். அதில் பிரபலமானது, பிளாஸ்டிக்கை தவிர்க்கும் மஞ்சள் பை இயக்கம்.

கிட்டத்தட்ட 40 குழுக்களின் பணியில் இருந்து சொல்லக்கூடியது என்றால், மஞ்சள் பை திட்டம் தான் இருக்கிறது. பின், எதற்காக 40 குழுக்கள்?

அமைதிப்படுத்தும் உத்தியா? எந்தவொரு குழுவாக இருந்தாலும் அதில் குறைந்தபட்சம் ஐந்து உறுப்பினர்களை பார்க்க முடிந்தது. மாதம் ஒருமுறை, ஆண்டுக்கு ஒரு முறை கூடிப் பேசுவர். ஏராளமான அரசு நிதி செலவிடப்பட்டது.

ஒரு கட்டத்தில், அரசு தன் மீதான விமர்சனங்களைத் தணிக்கவும், அதிருப்தியாளர்களை அமைதிப்படுத்தவுமே இந்த குழுக்களைப் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்தது.

அரசை தீவிரமாக விமர்சித்த பல சமூக செயற்பாட்டாளர்கள், இந்த 40க்கும் மேற்பட்ட குழுக்களில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவுடன் மவுனமாகிவிட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை ஆய்வு செய்ய, நிலப் பரிமாற்றங்களை எளிமைப்படுத்த, தொன்மையான கோவில்களைப் புதுப்பிக்க என, எதற்கெடுத்தாலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்காகப் பல கோடி ரூபாய் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், இக்குழுக்களின் எத்தனை அறிக்கைகள் முழுமையாகப் பொதுவெளியில் வைக்கப்பட்டன? எத்தனை பரிந்துரைகள் அரசாணைகளாக மாறின என்ற தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லை.

கடந்த ஐந்தாண்டுகளில், மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள் செய்த சாதனைகளையும், வீணடித்த நிதியையும் கணக்கெடுக்க கட்டாயம் இன்னொரு குழு அமைக்க வேண்டும்!

ramkij@gmail.com

ஜெ. ராம்கி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us