'விக்ஷித் பாரத்' கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
'விக்ஷித் பாரத்' கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
ADDED : அக் 05, 2025 10:19 PM

புதுடில்லி : சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா, பள்ளி மாணவர்களுக்கான, 'விக்ஷித் பாரத் கட்டமைப்பு' இயக்கத்தின் விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே, விண்வெளி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அது தொடர்பான ஆய்வு மற்றும் மாதிரிகளை மேற்கொள்ளவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு ஆலோசனைகள் வழங்கவும், மத்திய அரசு சார்பில், 'விக்ஷித் பாரத் கட்டமைப்பு' இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. அடல் புதுமை இயக்கம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த இயக்கத்தில், 6 - 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சேரலாம்.
நாடு முழுதும் உள்ள, 1.5 லட்சம் பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் 1 கோடி மாணவர்கள், மாதிரி ராக்கெட்டுகள், விண்கலன்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவர். ஆத்மநிர்பர் பாரத், சுதேசி, உள்ளூர் மக்களுக்கான குரல், சம்ரிதி ஆகிய நான்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கருப்பொருள்கள் அடிப்படையில், பல்வேறு ஆலோசனைகளையும் அவர்கள் வழங்குவர்.
இந்த திட்டத்தில் சேருவதற்கான பதிவு, கடந்த மாதம் 23ம் தேதி துவங்கிய நிலையில், இன்று முடிவடைகிறது. வரும் 14ம் தேதி மாணவர்களின் படைப்புகள், அறிவியல், தொழில்நுட்ப நிபுணர்களால் நேரடியாக சோதிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், வெற்றி பெறுபவர்கள் பட்டியல், டிசம்பரில் வெளியிடப்படும்.
இந்நிலையில், விக்ஷித் பாரத் கூட்டமைப்பு இயக்கத்தின் விளம்பர துாதராக, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லா நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.