UPDATED : செப் 08, 2025 12:13 PM
ADDED : செப் 08, 2025 12:00 PM

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு குஜராத்தில் இருந்து சிங்கங்களை வழங்க அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனைத்து வகையான வனவிலங்குகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இருந்த ஆசிய சிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டது. ஆசிய சிங்கம் அதிக எண்ணிக்கையில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டு வருவதற்கு பூங்கா நிர்வாகத்தினர் முயற்சி மேற்கொண்டனர்.
இந்த நிலையில், குஜராத்தின் ஜூனாகட் நகரில் உள்ள சக்கார்பாக் விலங்கியல் பூங்கா, ஒரு ஆண், இரு பெண் சிங்கங்கள் மற்றும் ஒரு பெண் காட்டுக் கழுதையை , தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், வண்டலூர் பூங்காவுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக, வண்டலூர் உயிரியல் பூங்கா, ஒரு இந்திய காட்டெருமை, வெள்ளை புலிகள் ஜோடி, சறுகு மான், வெள்ளை மயில் மற்றும் மஞ்சள் அனகோண்டாக்களை குஜராத்திற்கு அனுப்பும்.
இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ' எங்களிடம் தற்போது 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 5 பெண் சிங்கங்கள் உள்ளன, ஆனால் அவை எதுவும் தூய இனத்தைச் சேர்ந்தவை அல்ல. குஜராத்தில் இருந்து ஆசிய ஆண் சிங்கங்களைப் பெறுவது ஒரு தனித்துவமான மரபணு தொகுப்பை உருவாக்க எங்களுக்கு உதவும்,' என்றார்.