காசாவில் 2014ல் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்: 11 ஆண்டுகள் கழித்து சடலத்தை ஒப்படைத்த ஹமாஸ்
காசாவில் 2014ல் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்: 11 ஆண்டுகள் கழித்து சடலத்தை ஒப்படைத்த ஹமாஸ்
UPDATED : நவ 09, 2025 08:53 PM
ADDED : நவ 09, 2025 08:43 PM

ஜெருசலம்; காசாவில் 2014ம் ஆண்டு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த அக்.10ம் தேதி போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் பேரில் இந்த போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், இரு தரப்புமே தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை பரிமாற்றம் செய்து வருகிறது.
ஹமாஸ் ஒப்படைக்கும் ஒவ்வொரு பிணைக் கைதியின் உடலுக்கு ஈடாக, இஸ்ரேல் 15 பாலஸ்தீனர்களை ஒப்படைத்து வருகிறது. இந் நிலையில், காசாவில் 2014ம் ஆண்டு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. கொல்லப்பட்ட வீரரின் பெயர் ஹதர் கோல்டின். ஆக.1ம் தேதி 2014ல் கொல்லப்பட்டார்.
அந்த ஆண்டில், இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த 2 மணி நேரத்திற்கு பின் கொல்லப்பட்டார். அதன் பிறகு, கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ஹமாஸ் பிடியில் இந்த சடலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது போர் நிறுத்தம் உள்ள சூழலில், காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பின்னர், அந்த உடல் இஸ்ரேல் ராணுவத்திடம் அளிக்கப்பட்டது. இறந்த ராணுவ வீரர் சடலத்தை பெற்றுக் கொண்டு விட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
ஹமாஸின் இந்த நடவடிக்கையானது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் மேற்பார்வையிலான போர் நிறுத்தத்தின் மிக முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

