ADDED : செப் 09, 2025 08:01 AM

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு கடையில் காவலாளியாக இந்தியாவின் ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டம் பராகலனைச் சேர்ந்த கபில் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடையில் அவர் பணியில் இருந்த போது, கடைக்கு வெளியே ஒருவர் இயற்கை உபாதை காரணமாக சிறுநீர் கழித்துள்ளார்.
இதைக் கண்ட கபில், அந்த நபரை தடுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சிறுநீர் கழித்த நபர், தாம் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கபிலை சரமாரியாக சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்த கபில் உயிரிழந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட கபில் 3 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக சென்றவர் என தெரிகிறது. தொடக்கத்தில் அவர் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். அன்றிலிருந்து அமெரிக்காவில் வசித்து வரும் கபிலுக்கு சொந்த ஊரில் பெற்றோரும், 2 சகோதரிகளும் உள்ளனர்.
கபில் சுட்டுக்கொல்லப்பட்ட விவரம் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு வர மத்திய அரசும், ஹரியானா மாநில அரசும் உதவவேண்டும் என்று குடும்பத்தினரும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.