முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை; உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை; உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு
UPDATED : அக் 20, 2025 04:20 PM
ADDED : அக் 20, 2025 03:10 PM

சேலம்: தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்.,1 முதல் இன்று வரையில் வடகிழக்கு பருவமழையானது இயல்பை விட 58 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அதாவது, 95 மில்லி மீட்டர் மழை பெய்யும் நிலையில், 150.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் 23 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
அதேவேளையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இந்தாண்டில் மட்டும் 7வது முறையாக அணை நிரம்பியது. விநாடிக்கு 10,374 கனஅடியில் இருந்து 14,420 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,000 கனஅடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு பிறகு, 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட இருக்கிறது.
அதேபோல, தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை, 69 அடியை எட்டியுள்ளது. இதனால், விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 105 அடியில் தற்போது நீர்மட்டம் 101.36 அடியை எட்டியுள்ளது. 102 நீர்மட்டத்தை எட்டினால், அணையில் இருந்து தற்போது அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை 5 ஆயிரம் கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், பவானிசாகர் அணையின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கராபரணி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணை நீர்மட்டம் 29 அடியை எட்டியது.