ADDED : மே 18, 2026 04:53 AM

சென்னை: தமிழகத்தில் இன்று, 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தென்மேற்கு பருவ மழை, கேரள பகுதிகளில், வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்தச் சூழலில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு வலுவிழந்தது.
தற்போது, வடகிழக்கு தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று, ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
