நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் உயிரிழப்பு
UPDATED : அக் 05, 2025 05:01 PM
ADDED : அக் 05, 2025 02:04 PM

காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
நேபாளத்தின் கோஷி, மாதேஸ், பாக்மதி, கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பின. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று இரவு முதல் கிழக்கு நேபாளத்தில் கனமழையால், பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இலம் மாவட்டத்தில் உள்ள சூரியோதயா நகராட்சியின் மனேபன்ஜியாங்கில் ஐந்து பேரும், படேகான், மன்செபுங், டியூமா, துசுனி, ரத்மேட் மற்றும் கோசாங் பகுதிகளில் ஒன்பது பேரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
மீட்பு பணிகளுக்காக நேபாள ராணுவம் ஹெலிகாப்டரை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை ராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இருக்கின்றனர். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்பு படையினர் தெரிவித்தனர்.