' உயரத்துக்கும் எனக்கும் சிக்கலான உறவு' : விசாகப்பட்டினம் கண்ணாடி மேம்பாலம் குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து
' உயரத்துக்கும் எனக்கும் சிக்கலான உறவு' : விசாகப்பட்டினம் கண்ணாடி மேம்பாலம் குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து
UPDATED : செப் 07, 2025 04:56 PM
ADDED : செப் 07, 2025 04:53 PM

புதுடில்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி மேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், ' தனக்கும் உயரத்துக்கும் சிக்கலான உறவு ' உள்ளது எனக்கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நகராட்சி சார்பில் கைலாசிகிரி மலைப்பகுதியில் கண்ணாடி மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் நீளமான கண்ணாடி மேம்பாலம் என பெயர் பெற்றுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் இருந்து மக்கள் கடல் மற்றும் மலைகளின் காட்சிகளை பார்க்க முடியும். இதனை கட்ட ரூ.6 கோடி செலவாகி உள்ளது. ஒரே நேரத்தில் 40 பேர் வரை இந்த கண்ணாடி பாலத்தில் நின்று இயற்கை அழகை ரசிக்கலாம். இதன் மூலம் அங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் இந்த கண்ணாடி பாலம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கைலாசகிரி மலையின் மீது அமைக்கப்பட்டுள்ள புதிய கண்ணாடி மேம்பாலம் அடுத்த வாரம் திறக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இது உலகின் மிக உயரமாக கண்ணாடி மேம்பாலம் என விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஆனால் ஆச்சர்யப்படும் விஷயம், சீனாவில் உள்ள கண்ணாடி மேம்பாலத்தின் உயரம் மற்றும் நீளம் ஆகியவற்றுக்கான சாதனைகளை பெற்றுள்ளது. ஜாங்ஜியாஜி கண்ணாடி பாலம் தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்திலும் 430 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாகப்பட்டினத்தில் 262 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பிரமிக்க வைக்கிறது. ஆனால், அது எனது விருப்பப்பட்டியலில் இடம் பிடிக்குமா என்றால் அநேகமாக இல்லை. உயரத்துக்கும் எனக்கும் சிக்கலான உறவு உள்ளது. தற்போதைக்கு வீடியாக்கள் மூலம் காட்சிகளை அனுபவிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.