திருவண்ணாமலை கோவிலில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட் தடை
திருவண்ணாமலை கோவிலில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட் தடை
ADDED : செப் 26, 2025 01:05 AM

சென்னை: 'திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உள்ளே, வெளியே, எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ''கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், புராதன கோவிலின் உள்ளே கட்டுமான பணி நடக்கிறது,'' எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, இந்த நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வராமல், அறநிலைய துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் செயல் கண்டனத்திற்குரியது.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காவது பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்படுகிறது. இது, அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் வகையில், ஆவண, ஆதாரங்களுடன், அறநிலைய துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்., 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
அதுவரை, நான்காம் பிரகாரத்தில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமின்றி, கோவிலின் உள்ளே மற்றும் வெளியே, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள அறநிலைய துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அக்., 5ம் தேதி கோவிலில் ஆய்வு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.