அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 28, 2025 12:25 AM

சென்னை: 'சமூக வலைதள கருத்துகளுக்காக, சொந்த குடிமக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன், அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட, 'யு -டியூபர்' சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கக் கோரி, அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கருத்து சுதந்திரம்
அதை விசாரித்த, நீதிபதிகள் சுப்பிரமணியம், தனபால் அமர்வு, நிபந்தனை ஜாமின் வழங்கியது. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:
இணைய யுகத்தில் அனைத்து திசைகளில் இருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன. தவறான தகவல்களைப் பரப்பும் ஒவ்வொரு நபரையும் தண்டிப்பது என்பது சாத்தியமற்றது.
அந்த தகவல், பொது அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.
ஒவ்வொருவரின் கருத்தையும், எண்ணங்களையும், அரசு இயந்திரம் வேட்டையாட துவங்கினால், அந்த குரல்களை அடக்கி விட முடியும்; ஆனால், அது எந்த பலனையும் தராது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதுபோன்ற பயனற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும், ஒரே மாதிரியான கருத்துகளை எதிர்பார்த்தால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்க முடியாது.
அதிருப்தி என்பது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கலாம்.
ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை தடுப்பதற்காக, சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட, அரசுக்கு பெரிய கடமைகள் உள்ளன.
மாற்றுக் கருத்துகளால் தனிநபர் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால், அவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், அரசு தன் சொந்த குடிமகனுக்கு எதிராக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்போது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சமூக வலைதள பதிவுகள், யு -டியூப் வீடியோக்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது, யாருடைய எண்ணங்களையும் மாற்றாது. மாறாக, அது மக்களின் பேச்சுரிமையை நசுக்குவதாக உணர வைக்கும்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள கருத்து சுதந்திரம் என்பது, நம் ஜனநாயகத்திற்கான அழகு. வழக்குகள் வாயிலாக அரசு இயந்திரம், தனிமனித சுதந்திரத்தை நசுக்க துவங்கினால், ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கையை இழப்பர்.
தடுக்கும் முயற்சி
அரசியலமைப்பு சட்டத்திலிருந்து அதிகாரம் பெறும் அரசு அமைப்புகள், மக்களுக்காகவே செயல்பட வேண்டும்; அதுவே அரசின் கடமை. அந்த கடமையைச் செய்யும்போது, அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருவது இயல்பு.
அதில் ஏற்றுக் கொள்ள முடியாத விமர்சனங்களும் இருக்கக்கூடும்.
விரும்பத்தகாத கருத்துகளை பரப்பும் சிறு குழுக்களை கட்டுப்படுத்த, அனைவரின் குரல்களையும் ஒட்டுமொத்தமாக நெரிக்கக்கூடாது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் எந்தவொரு செயல்பாட்டிலும், அரசு நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது.
தான் உண்மை என கருதுவதை, ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். ஒரு அரசியல் தலைவர், கட்சி, சித்தாந்தங்கள் பற்றி, ஒரு கருத்தை உருவாக்குகிறார். ஆனால், இதுதான் உண்மை என, யாரும் யாகுக்கும் கட்டளையிட முடியாது. மனதால் உணரப்பட்ட உண்மை, ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.
தனிப்பட்ட நபர் ஒருவரால் மற்றவர்களின் பார்வைகளையோ, கருத்துகளையோ மாற்ற முடியாது. கருத்து பதிவிடும் அதிகாரத்தை பறிப்பது, ஒருவரின் கருத்துகள் மற்றவர்களுக்கு சென்றடைவதை தடுக்கும் முயற்சி.
அரசால் எத்தனை பேரை தடுக்க முடியும்; ஒருவரது எண்ணங்களை நம்மால் மாற்ற முடியுமா? சிந்தனை சுதந்திரத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
ஒருவர் தன் கருத்துகளுடன் ஒத்துப்போகும் நபர்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். தனக்கு முரணான கருத்துகளை புறக்கணிப்பார் அல்லது விமர்சனம் செய்வார். இதுதான் சமூக வலைதளங்களின் இயல்பு. எனவே, மற்றவர்களை துாண்டிவிட்டார் எனக் கூறி, கருத்து பதிவிட்டவரை முழுதாக பொறுப்பாக்க முடியாது.
சமூக வலைதளங்கள், எந்தவொரு கருத்தையும் யார் மீதும் திணிப்பதில்லை; கட்டாயப்படுத்துவதும் இல்லை. எதை பார்க்க வேண்டும் என்பது, பார்வையாளர்களின் கையில்தான் உள்ளது.
தணிக்கை வேண்டாம்
அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்கைகள், நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது.
இத்தகைய கருத்துகளுக்கு எதிரான தணிக்கை ஆரோக்கியமானது அல்ல. சமூக ஊடகங்களில் வெளியாகும் கருத்துகளை கடுமையான முறையில் அணுகுவதன் வாயிலாக, அரசு ஒரு முடிவற்ற, பயனற்ற பயணத்தில் ஈடுபட்டுள்ளது.
சங்கருக்கு மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக, அவரது தாய் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இது, சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புக்கு கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தும்.
தங்களுக்குப் பிடிக்காத குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று, பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

