ஹமாஸ் பிடியில் இருந்த ஹிந்து இளைஞர் மரணம்? உறவினர்கள் அச்சம்
ஹமாஸ் பிடியில் இருந்த ஹிந்து இளைஞர் மரணம்? உறவினர்கள் அச்சம்
ADDED : அக் 13, 2025 09:05 PM

டெல் அவிவ்: ஹமாஸ் விடுதலை செய்த பிணைக்கைதிகளின் பட்டியலில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி என்ற இளைஞர் பெயர் இல்லை. அவரின் கதி என்ன என்பது குறித்து தெரியவில்லை. அவர் ஹமாஸ் பிடியில் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் இருந்து விவசாயம் தொடர்பான படிப்புக்கு இஸ்ரேல் சென்றவர் பிபின் ஜோஷி (23) என்ற இளைஞர், 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கிக் கொண்டார். அதன் பிறகு அவரின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால், அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்ற குழப்பத்தில் குடும்பத்தினர் இருந்தனர்.
சமீபத்தில், டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிறுத்தம் அமலானது. இதனையடுத்து பிணைக்கைதிகள் புகைப்படத்தை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டு இருந்தனர். அதில் பிபின் ஜோஷி புகைப்படமும் இருந்தது. அந்தப் படம், பிணைக்கைதிகள் பிடிபட்ட பிறகு சில நாட்களில் எடுத்த புகைப்படம் ஆகும். இதனால், அவர் உயிருடன் இருப்பார் என அவரது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இந்நிலையில், பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுவித்தனர். முன்னதாக விடுவிக்கப் போகும் நபர்களின் பட்டியலையும் வெளியிட்டு இருந்தனர். அதில், அவர்கள் பிடியில் இருந்த 20 பேரின் பெயர்கள் இருந்தன. ஆனால், பிபின் ஜோஷி மற்றும் தமிர் நிம்ரோடி ஆகியோர் குறித்த தகவல் ஏதும் இல்லை. இதனால், அவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் தெரியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் நிலை குறித்து ஹமாஸ் அமைப்பினர் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பிபின் ஜோஷி உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என இஸ்ரேல் ராணுவம், நேபாள தூதரிடமும், குடும்பத்தினரிடமும் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், நேபாள அரசிற்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் அளிக்கவில்லை.