மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், வருவாய் எவ்வளவு? விபரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்
மீனாட்சி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள், வருவாய் எவ்வளவு? விபரம் கேட்கிறது உயர் நீதிமன்றம்
ADDED : செப் 05, 2025 06:23 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் விபரங்களை அறிக்கையாக, அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சேலம் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சென்னை உயர் நீதிமன்றம், 'தமிழக தலைமை செயலர், அனைத்து துறை தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வழிகாட்டுதல், விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என, 2021ல் உத்தரவிட்டது.
அதன்படி, தலைமை செயலர் தலைமையில் 2021ல் கூட்டம் நடந்தது. அனைத்து துறை அதிகாரிகளும் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தலைமை செயலர் உத்தரவிட்டார். அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அதன் பிறகு கூட்டம் நடக்கவில்லை. இதனால் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில், மறு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதற்குரிய புள்ளிவிபர அறிக்கையை அரசுக்கு அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர், கோவில் இணை கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர், 'அறிக்கையில் எந்த தகவலும் இல்லை. கோவில் சொத்துக்களுக்குரிய ஆவணங்களை சரியாக பராமரிப்பதில்லை. அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டது. அதற்குரிய வாடகை, 20 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை. புது கட்டடத்திற்கு வாடகையை நிர்ணயிக்கவில்லை. இது தணிக்கை அறிக்கையில் உள்ளது' என்றார்.
அரசு தரப்பு, 'எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளது என மனுதாரர் தெளிவுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மேம்போக்காக உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன, அதன் உப கோவில்களின் விபரம், அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு?
வருவாய் எந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது; சொத்துக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா; இருக்கும் பட்சத்தில் அகற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; சொத்துக்களின் விபரங்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி சரியாக உள்ளனவா என்பது குறித்து, அறநிலையத்துறை தரப்பில் அக்., 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.