கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்
கோவையில் குற்றவாளிகளை சுட்டுப்பிடித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் விளக்கம்
ADDED : நவ 04, 2025 11:11 AM

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் தொடர்பாக 300 வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. துடியலூர் அடுத்த வெள்ளகிணறு என்ற இடத்தில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது.
அங்கு சென்ற போலீசாரை குற்றவாளிகள் ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கினர். பின்னர் போலீசார் அவர்களை சுட்டுப்பிடித்தனர். அவர்கள் 3 பேர் மீது 4,5 குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 பேர் மீதும் கொலை, திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சதீஷ் மற்றும் கார்த்தி சகோதரர்கள், குணா உறவினர் ஆவார். 300 சிசிடிவி வீடியோ பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டோம். சதீஷ், குணா ஆகியோருக்கு இரண்டு காலிலும் குண்டு பாய்ந்துள்ளது. கார்த்தி என்பவருக்கும் ஒரு காலில் குண்டு பாய்ந்துள்ளது.
'காவல் உதவி' செயலியை பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் செல்போனை அவசர நேரத்தில் மூன்று முறை ஆட்டினால், போலீசார் உதவிக்கு வருவார்கள். புகார் வந்த உடனேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 11.20க்கு 100க்கு உதவி கேட்டு அழைப்பு வந்தது. 11.35க்கு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்தது போல் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

