பா.ஜ.,வில் சேர எனக்கு அழைப்பு: துணை முதல்வர் சிவகுமார் 'குண்டு'
பா.ஜ.,வில் சேர எனக்கு அழைப்பு: துணை முதல்வர் சிவகுமார் 'குண்டு'
ADDED : அக் 17, 2025 01:03 AM

பெங்களூரு: “கடந்த 2019ம் ஆண்டே பா.ஜ.,வில் இணையும்படி எனக்கு அழைப்பு வந்தது. கட்சியின் விசுவாசத்திற்காக சிறைக்கு சென்றேன்,” என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் புதிய 'குண்டு' போட்டுள்ளார்.
'கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையா, துணை முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனக்கு பதவி கிடைக்காவிட்டால், ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 50 பேருடன் சிவகுமார், எங்கள் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளது' என, சில மாதங்களுக்கு முன்பு, பா.ஜ., தலைவர்கள் கிண்டல் அடிக்கும் வகையில் கூறினர். 'கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டேவாக சிவகுமார் மாறுவார்' என்றும் கூறினர்.
இந்நிலையில் கன்னட திரையுலகின் இளம் இயக்குநர் கே.எம்.ரகு 'விசுவாசத்தின் சின்னம் டி.கே.சிவகுமார்' என்ற பெயரில் புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, பெங்களூரில் நடந்தது.
விழாவில் துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியில் 17 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர். அப்போது நான் கனகபுராவில் இருந்தேன். பெங்களூருக்கு வந்து எம்.எல்.ஏ.,க்களை சிலரை, எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு அழைத்துச் சென்று பேசினேன்.
அப்போது என்னுடன் என் சகோதரர் சுரேஷும் இருந்தார். அந்த நேரத்தில் டில்லியில் உள்ள வருமான வரி அலுவலக டி.ஜி.,யிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னிடம் பா.ஜ., தலைவர் ஒருவர் பேசினார். அவர் பெயரை நான் கூற மாட்டேன்.
'பா.ஜ,வுக்கு ஆதரவு அளித்து, துணை முதல்வர் ஆகின்றீர்களா அல்லது சிறைக்கு செல்கிறீர்களா?' என்று கேட்டார். சிறைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தேன். எம்.எல்.ஏ.,க்களை அனுப்பி வைத்தேன். பின், நான் சிறைக்கும் சென்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.