ஹரியானாவில் போலீஸ் அதிகாரி தற்கொலை: ஐபிஎஸ் அதிகாரி மரணம் குறித்து திடுக் தகவல்
ஹரியானாவில் போலீஸ் அதிகாரி தற்கொலை: ஐபிஎஸ் அதிகாரி மரணம் குறித்து திடுக் தகவல்
UPDATED : அக் 14, 2025 05:02 PM
ADDED : அக் 14, 2025 04:05 PM

சண்டிகர்: ஹரியானாவில் சைபர் செல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில், ' தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் ஊழல் செய்தவர் என்றும், உண்மை வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார் ' எனத் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் காவல் பயிற்சி மைய அதிகாரி புரன்குமார்(52) அக். 7 ஆம் தேதி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பாக அவர் 8 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். இந்த கடிதத்தை டிஜிபி சத்ருஜித் கபூர், ரோஹ்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா ஆகியோருக்கு எழுதியிருந்தார். கடிதத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தம்மை ஜாதி ரீதியாக பாகுபாடு செய்து துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து ரோஹ்தக் எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிஜிபி சத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் ரோஹ்தக்கில் உள்ள சைபர் செல் பிரிவில் ஏஎஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சந்தீப் குமார் என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதத்தில், '' உண்மைக்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன். புரன்குமார் ஊழல் அதிகாரி. தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெளிப்பட்டு விடும் என்ற பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. அவரது தற்கொலை வழக்கில் நான் கைது செய்யப்படுவேன் என்ற அச்சம் உள்ளது. நான் இறப்பதற்கு முன்னர் ஊழல் அமைப்பை வெளிப்படுத்த விரும்பினேன். பாரபட்சமற்ற விசாரணை வேண்டி எனது வாழ்க்கையை தியாகம் செய்கிறேன். ஊழல் குடும்பம் தப்பிவிடக்கூடாது. தனது கடமையில் இருந்து தப்பித்துக்கொள்ள புரன் குமார் ஜாதி அரசியலை பயன்படுத்தினார்''. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார். வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை குற்றம்சாட்டி மற்றொரு போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.