ADDED : நவ 02, 2026 01:22 AM

பாட்னா: பீஹாரில், எம்.எல்.சி., எனப்படும், சட்ட மேல்சபை தேர்தலில் வென்ற இரு சுயேச்சைகள், பா.ஜ.,வில் இணைந்தனர்.
பீஹாரில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இம்மாநில சட்ட மேல்சபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., கூட்டணி, 3, எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 2, சுயேச்சைகள், 2 மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றன.
இந்நிலையில், திர்ஹுத் பட்டதாரி தொகுதியில் வென்ற சுயேச்சை வேட்பாளர் பன்ஷிதார் பிரஜ்வாசி, சரண் ஆசிரியர் தொகுதியில் வென்ற ராகுல் ராஜ் இருவரும், முதல்வர் சாம்ராட் சவுத்ரி முன்னிலையில் நேற்று முன்தினம் பா.ஜ.,வில் இணைந்தனர். இதில், ராகுல் ராஜ் ஏற்கனவே பா.ஜ.,வில் இருந்தவர்.
சரண் தொகுதியில் வேறொரு வேட்பாளரை பா.ஜ., நிறுத்தியதால், சுயேச்சையாக அவர் போட்டியிட்டதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, மீண்டும் பா.ஜ.,வில் அவர் ஐக்கியமாகி உள்ளார். பதவியேற்கும் முன்னரே, பன்ஷிதார் பிரஜ்வாசி, ராகுல் ராஜ் பா.ஜ.,வில் இணைந்ததற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
