ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு; ஓட்டெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு; ஓட்டெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ADDED : பிப் 25, 2026 07:59 AM

நியூயார்க்: 5 ஆண்டுகளை எட்டியுள்ள ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 107 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா உள்பட 51 நாடுகள் இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்தன.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 5ம் ஆண்டை எட்டியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா முன்னிலையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
எனவே, போர் நிறுத்தம் செய்வதற்காக உலக நாடுகளின் ஆதரவு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திரட்டி வருகிறார். இந்த சூழலில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐநா சபையில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலாந்து உள்பட 107 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அதேவேளையில், இந்தியா, அமெரிக்கா, சீனா, இலங்கை, வங்கதேசம், பஹ்ரைன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 51 நாடுகள் இந்த ஓட்டெடுப்பை புறக்கணித்து, நடுநிலை வகித்தன. மேலும், கியூபா, ஈரான், மாலி, ப்ருண்டி, பெலாரஸ், ரஷ்யா கூட்டமைப்பு, சூடான்,நைஜர் உள்ளிட்ட 12 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு எதிரான ஓட்டளித்தன.
போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் நாட்டு மக்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன் கூடிய எங்களின் தீர்மானத்தை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இவை சரியான நடவடிக்கை. அமைதியை ஏற்படுத்த எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன்,' என்று பதிவிட்டுள்ளார்.

