வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது; இந்தியா கண்டிப்பு
வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது; இந்தியா கண்டிப்பு
ADDED : செப் 14, 2026 07:19 AM

புதுடில்லி: ஓமன் கடற்கரைக்கு அப்பால், பனாமா நாட்டின் வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டித்தது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன ஒரு இந்திய மாலுமியை தேடும் பணி நடக்கிறது.
ஓமன் கடல் பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்டி எல் கையா' என்ற எண்ணெய் கப்பல் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இக்கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளில் 13 பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓமன் கடற்கரைக்கு அப்பால் எம்டி எல் கையா என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 14 இந்தியக் குழுவினரில், இதுவரை 13 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன இந்தியரைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஓமனில் உள்ள நமது தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஓமன் அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்திய மாலுமிகளை மீட்பதில் ஓமன் அதிகாரிகள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட, பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்ற எங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இப்பகுதியில் வணிகக் கப்பல்கள், மாலுமிகள், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மேலும், இப்பகுதியில் உள்ள சர்வதேச நீர்வழிகள் வழியாகத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தையும் வணிக நடவடிக்கைகளையும் விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
