ஆஸி.,க்கு 131 வெற்றி ரன் இலக்காக நிர்ணயம்; ரோகித், கோலி ஏமாற்றம்
ஆஸி.,க்கு 131 வெற்றி ரன் இலக்காக நிர்ணயம்; ரோகித், கோலி ஏமாற்றம்
ADDED : அக் 19, 2025 03:06 PM

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 131 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பெர்த் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. 223 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கிய ரோகித் ஷர்மா 8 ரன்னிலும், கோலி ரன் ஏதுமின்றியும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் கில் 10 ரன்னில் அவுட்டானார்.
25 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கிட்டது. தொடர்ந்து வானிலை மோசமாக இருந்ததால் ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்படி பேட் செய்த இந்திய அணிக்கு அக்ஷர் படேல் (31), கேஎல் ராகுல் (38) ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்து ஆட்டமிழந்தனர். தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களம் கண்ட நிதிஷ்குமார் ரெட்டி, கடைசி ஓவரில் இரு சிக்சர்களை பறக்க விட்டார். இதனால், இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன் சேர்த்தது. நிதிஷ்குமார் 11 பந்துகளில் 19 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட், ஓவன்,கூனெமன் தலா 2 விக்கெட்டும், ஸ்டார்க், எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்திய அணி 136 ரன் குவித்திருந்தாலும், டிஎல்எஸ் முறை கணக்கீட்டின்படி, ஆஸ்திரேலியா அணிக்கு 131 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.