தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு
தாமிரம் வாங்க தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா பேச்சு
ADDED : நவ 07, 2025 04:18 AM

புதுடில்லி: நம் நாட்டின் தொழில்துறை மற்றும் மின்சார வாகன துறைக்கு தேவையான முக்கிய கனிமங்களை தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் சிலியிடம் இருந்து பெற, மத்திய அரசு விரிவான வர்த்தக பேச்சை துவக்கி உள்ளது.
தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில், அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் ஒன்பதாவது சுற்று பேச்சு, நவ., 3 முதல் 5 வரை நடந்தது. இதில், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஒத்துழைப்பு வர்த்தகம், சுங்கம், கனிம ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் முடிவாக உள்ள ன.
இது தொடர்பான அடுத்த சுற்று பேச்சு, அடுத்த ஆண்டு ஜனவரியில் டில்லியில் நட க்க உள்ளது.
இதற்கு முன் அக்., 27- - 30ல், சிலி தலைநகர் சாண்டியாகோவில் இந்தியா - -சிலி இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று பேச்சு நடந்தது.
இதில் பொருட்கள், சேவைகள், முதலீடு, அறிவுசார் சொத்து, கனிமங்கள் உள்ளிட்ட துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
லித்தியம், தாமிரம், மாலிப்டினம் போன்ற கனிமங்களை இந்தியாவுக்கு பெறுவது இந்தப் வர்த்தக பேச்சின் முக்கிய நோக்கமாக இருந்தது. பெருவில் இருந்து தங்கம், சிலியில் இருந்து லித்தியம், தாமிரம் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இதில் நிலையான விலை, முன்னுரிமைகள் தேவை என இந்த பேச்சில் வலியுறுத்தப்பட்டது.
இதற்காகவே வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய கனிமங்கள் என்ற தனி அம்சம் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தனிநபர் தாமிர நுகர்வு வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவாக உள்ளது.
தற்போது தொழில்துறை வளர்ச்சி மற்றும் மின்சார வாகனங்கள் உற்பத்தி வேகமெடுப்பதால் தாமிரத்தின் தேவை பல மடங்கு உயரும்.
நிச்சயமற்ற தன்மை இந்நிலையில், சீனா தாமிர சந்தையை கைப்பற்ற அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி குவிக்கிறது. இதைத் தடுக்க பெரு, சிலி நாடுகளுடன் நமக்கு நெருக்கம் தேவை.
இரு நாடுகளும் ஏற்றுமதி சந்தைக்கு சீனாவை மட்டும் சார்ந்திருக்க விரும்பவில்லை. அதை பல்வகைப்படுத்த விரும்புகின்றன.
இந்த சூழலில் இரு நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தால், அது சர்வதேச அரசியல் நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய வினியோக தொடரில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு கவசமாக அமையும்.

