போர்களை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்; இத்தாலி பிரதமர் மெலோனி
போர்களை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்; இத்தாலி பிரதமர் மெலோனி
ADDED : செப் 24, 2025 10:35 AM

நியுயார்க்: உலக நாடுகள் இடையேயான போர்களை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில், பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச அளவில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் பேசினர். அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் சுமூக தீர்வுக்கான முழு ஆதரவை இந்தியா வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி வாழ்த்துகளையும் மெலோனி கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மெலோனியிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தினர், உலகளவில் மற்ற நாடுகள் இடையேயான போரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்குமா என்ற கேள்வியை முன் வைத்தனர்.
கேள்வியை எதிர்கொண்டு நடந்தபடியே சென்று கொண்டிருந்த மெலோனி, இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறிச் சென்றார்.
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவுக்கு முதன்மையான நிதி அளிப்பது இந்தியா, சீனா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருக்கும் சூழலில் இத்தாலி பிரதமர் மெலோனியின் இந்த மதிப்பீடு, உலக நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.