இந்தியா டூ சீனா: மின்னணு ஏற்றுமதி 40% அதிகரிப்பு
இந்தியா டூ சீனா: மின்னணு ஏற்றுமதி 40% அதிகரிப்பு
ADDED : செப் 21, 2026 09:33 PM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், சீனாவுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களின் கட்டுமானம் அதிகரித்து வருவதால், இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இந்த வளர்ச்சியை எட்டியுள்ளதாக தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் பி.சி.பி., எனும் 'பிரின்டட் சர்க்யூட் போர்டுகள்' ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததன் வாயிலாக, சீனாவுடனான வர்த்தகம் கிட்டத்தட்ட 30,210 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்திலும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 15 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இதை தவிர்த்து இயந்திரங்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியும் இதே காலகட்டத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வரி கொள்கை மாற்றங்கள் மற்றும் இந்த திடீர் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவையே, இரு நாட்டு பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சீனாவுக்கான ஏற்றுமதி தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஏற்றத்தாழ்வை குறைப்பதில் இது பெரிய அளவில் உதவவில்லை. ஏனெனில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சீனாவின் பங்கு கடந்த நிதியாண்டில் 4.40 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டில் 3 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா கிட்டத்தட்ட 12.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீன பொருட்களை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் காலங்களில் சீனாவுக்கான ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
