லண்டனில் காந்தி சிலை சேதம் வெட்கக்கேடான செயல்; இந்திய தூதரகம் கடும் கண்டனம்
லண்டனில் காந்தி சிலை சேதம் வெட்கக்கேடான செயல்; இந்திய தூதரகம் கடும் கண்டனம்
ADDED : செப் 30, 2025 07:37 AM

லண்டன்; லண்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை உள்ளது. தியான நிலையில் காந்தி இருப்பதை போன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒரு அடையாளமாகவும் இந்த சிலை போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி இங்கு கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில், இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த விவரத்தை அறிந்த இந்திய தூதரகம், இந்த செயல் ஒரு வெட்கக்கேடானது என்று கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையை நாசப்படுத்திய வெட்கக்கேடான செயலை மிகவும் வருத்தத்துடன் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அஹிம்சை தினத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு, அஹிம்சை கருத்து மற்றும் காந்தியின் மரபு மீதான வன்முறைத் தாக்குதல்.
இதுகுறித்து உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவ இடத்தில் எங்கள் அதிகாரிகள் ஏற்கனவே சென்றுவிட்டனர். சிலையின் கண்ணியத்தை காக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த பதிவில் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.