'வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: அடையாளத்தை மறைத்து வெளியேறி தப்பினேன்'
'வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: அடையாளத்தை மறைத்து வெளியேறி தப்பினேன்'
ADDED : டிச 23, 2025 01:25 AM

கொல்கட்டா: “வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை; இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியேறினேன்,” என, சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான் தெரிவித்து உள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
போராட்டம்
அந்நாட்டின் தலைமை ஆலோசகராக கடந்தாண்டு பொறுப்பேற்றது முதல், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை யூனுஸ் எடுத்து வருகிறார். அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து, ஆட்சி கவிழ்ப்பில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாடு முழுதும் வன்முறை வெடித்துள்ளது. ஹிந்து இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார். இந்திய துாதரகம் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கம் கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சமீபத்தில் வங்கதேசம் சென்றார். அங்கு எதிர்கொண்ட பயங்கர அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவ து:
நான்கு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வங்கதேசம் அழைக்கப்பட்டேன். கடந்த 16ல், நான் அங்கு சென்றபோது நிலைமை சாதாரணமாக இருந்தது. இருப்பினும், நிகழ்ச்சியில் கூட்டம் இல்லை. ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது. பின்னர், நிலைமை மோசமடைந்து வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். இந்தியன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என, எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த 17ல், குல்ஷான் அருகே சோதனைச்சாவடியில் அந்நாட்டு போலீசார் என்னை சோதனை செய்தனர். வெளிநாட்டு நாணயங்களை யாராவது எடுத்துச் செல்கின்றனரா என்பதற்கான சோதனை என போலீசார் தெரிவித்தனர். என்னை, ஷிராஸ் அலி கான் என அறிமுகப்படுத்தி கொண்டேன். நான் ஒரு முஸ்லிம் என்பதை குறிக்கும் வகையில் என் பெயரை சொன்னேன்.
இசைக்குழுவினர் என்னிடம் எதுவும் கேட்காமல் அனுப்பிவிட்டனர். பொதுவாக, வங்கதேசம் செல்லும் போது கொல்கட்டாவின் வங்காள மொழி பேசுவேன். என் பூர்வீகம் வங்கதேசம் என்பதால், நான் உள்ளூர் வங்கமொழியில் போலீசாரிடம் பேசினேன். இதுவும் என்னை காப்பாற்றியது.
மறுநாள் சாயானாவுட் செல்ல இருந்தோம். நிலைமை அங்கு சரியில்லை என்பதால், அங்கு நடைபெற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்திய துாதரகத்தை தொடர்பு கொள்ள முயன்றேன். அது மூடியிருந்தததால், என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக தப்பித்து நாடு திரும்பினேன்.
வங்கதேசத்தில், இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லை. ஹிந்து, இந்தியன் போன்ற அடையாளங்களை மறைத்து தான் நாடு திரும்பினேன். அங்குள்ள இந்தியர்கள், எப்படியாவது தாயகம் திரும்பிவிட வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். என் மூதாதையர்கள் அங்கிருப்பதால், என் தாயாரும், இசைக்குழுவினர் சிலரும் வங்கதேசத்தில் உள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவர்.
என் வாழ்க்கையில் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை. ஒன்றுமட்டும் நிச்சயமாக சொல்வேன். அங்கு எந்த காரணமும் இன்றி, இந்தியர்கள் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
முஸ்லிம் அடையாளம் இருந்ததால் மட்டுமே என்னால் உயிர் பிழைத்து வர முடிந்தது. தற்சமயம், இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம். நிலைமை சீராகும் வரை நானும் வங்கதேசம் செல்லமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

