நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
நாட்டின் முதல் புல்லட் ரயில் ஆக.2027ல் இயக்கம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ADDED : அக் 10, 2025 10:01 AM

புதுடில்லி; நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கம் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
மும்பை மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே அதிவேகம் கொண்ட புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி 2015ல் அறிவித்தார். 2017ம் ஆண்டு செப்டம்பரில் இந்த திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இவ்விரு நகரங்களுக்கு இடையேயான 508 கிமீ தூரத்திற்கு 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் தொழில் நுட்பத்தில் அமைக்கப்படும் புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி.
இந் நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கம் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
குஜராத்தில் கண்பத் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
புல்லட் ரயில் திட்டத்திற்கான அனைத்து பணிகளும் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என்பதை நீங்கள் எல்லாரும் நன்றாக அறிவீர்கள். குஜராத்தில் அதன் பணிகள் திறம்பட நடைபெற்று வருகின்றன.
ரயில் தண்டவாள பாதைகள் அமைப்பது, மின்சார வினியோகம் என அனைத்து பணிகளும் துரித வேகத்தில் நடக்கிறது. அண்மையில், ஜப்பான் அமைச்சர் நகானோ குஜராத்திற்கு வந்திருந்தார். இந்த திட்டத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை அப்போது கேட்டறிந்தார்.
ஆக. 2027ம் ஆண்டு புல்லட் ரயில் சேவையை தொடங்க வேண்டும். மக்கள் சேவைக்கு அதை அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.