மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி
மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் இயங்கும் ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி
ADDED : ஜூன் 26, 2026 08:41 PM

ஜிந்த்: 'ஹைட்ரஜன்' எரிபொருள் மூலம் இயங்கும் நம் நாட்டின் முதல் ரயிலின், அதிவேக சோதனை ஓட்டம், ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
நிலக்கரி, டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாகவும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் நோக்கில், 'ஹைட்ரஜன்' ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., தொழிற்சாலையில், 118 கோடி ரூபாய் செலவில் அதிநவீன ஹைட்ரஜன் ரயில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், இந்த ரயில், ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் - லலித் கேரா இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ரயில்வே துறையின் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பின் சிறப்புக் குழுவின் மேற்பார்வையில், ஜிந்த் - சோனிபட் இடையே 10 பெட்டிகளுடன் ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் நாடுகளின் பட்டியலில் நம் நாடும் இணைய உள்ளது.
முன்னதாக, இத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, ஹரியானாவின் ஜிந்த் பகுதியில் ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதிகளை இந்திய ரயில்வே கட்டமைத்துள்ளது. இதேபோல் ஹைட்ரஜன் கசிவை கண்டறியும் கருவிகள், தீ விபத்துகளை கண்டறியும் சாதனங்கள், தொடர்ச்சியான கண்காணிக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ரயில், டீசலுக்குப் பதிலாக, ஹைட்ரஜன் எரிபொருள் செல்களை பயன்படுத்துகிறது. இதன்மூலம் இயக்கப்படும் இந்த ரயிலில் இருந்து கரியமில வாயு போன்ற நச்சு புகைக்கு பதிலாக, துாய்மையான நீராவி மட்டுமே வெளிவரும். இதன்படி சுற்றுச்சூழல் பாதிப்பு பெருமளவு குறையும். இதேபோல் வழக்கமான ரயில்களை விட, சத்தம் மற்றும் அதிர்வுகள் மிகக் குறைவாகவே இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
