இந்திய அணி மூன்றாவது வெற்றி: அரைசதம் விளாசினார் ஷைபாலி
இந்திய அணி மூன்றாவது வெற்றி: அரைசதம் விளாசினார் ஷைபாலி
ADDED : டிச 26, 2025 10:40 PM

திருவனந்தபுரம்: ஷைபாலி வர்மா அதிரடியாக விளையாடி 79 ரன் எடுக்க இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியை இந்திய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடந்தன. இந்த இரண்டிலும் வென்ற இந்தியா, 2- - 0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இன்று இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி, திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக இமேஷா துலானி 27, துவக்க வீராங்கனை ஹசினி பெரேரா 25, கவிஷா தில்ஹரி 20 ரன் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சமரி அதபத்து 3, சமரவிக்ரமா 2, நிகஷிகா சில்வா2, மல்ஷா 5 ரன் எடுக்க அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்தது. இந்திய அணியின் ரேணுகா சிங் 4, தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினர். இன்று 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 150 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அதிரடி
இதனையடுத்து 113 ரன் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 1, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்னில் அவுட்டானார்கள். மற்றொரு துவக்க வீராங்கனை ஷைபாலி வர்மா அரைசதம் விளாசினார். அவர் அவுட்டாகாமல் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். ஹர்மன்ப்ரீத் 21 ரன் எடுக்க இந்திய அணி 13.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதுடன் கோப்பையை கைப்பற்றியது.

